அடியாட்கள் வைத்து மிரட்டுகிறார் ஜாக்குவார் தங்கம்- கில்டு நிர்வாகிகள் புகார்

அடியாட்கள் வைத்து மிரட்டுகிறார் ஜாக்குவார் தங்கம்- கில்டு நிர்வாகிகள் புகார்

சென்னை தி.நகரில் தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர்கள் சங்கம் இயங்கி வருகிறது. “கில்டு” என்றழைக்கப்படும் இச்சங்கத்தின் செயலாளர்கள் துரைசாமி,ஜம்போ, நிர்வாகக்குழு உறுப்பினர் கமலநாதன், உறுப்பினர் சுரேஷ்குமார் ஆகியோர் கூட்டாக  சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அந்த அமைப்பின் செயலாளர் துரைசாமி, “கில்டு அமைப்பு கடந்த நான்கு வருடங்களாக கணக்கு வழக்குகளை சமர்ப்பிக்காததால் பதிவுத்துறை நடவடிக்கையால் தற்போது முடக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி 28ம் தேதி அரசிதழில் கில்ட் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் அரசிதழில் வெளிவந்த செய்தியை முழுவதுமாக மறைத்து சங்கத்திற்கு வரும் உறுப்பினர்களிடம் சந்தா புதுப்பித்தல், படத்தலைப்பு பதிவு செய்தல் மற்றும் உறுப்பினர்களை சேர்த்தல் போன்ற செயல்களின் மூலம் முறைகேடாக பணங்களை பெற்று வருகிறார். இதற்கு சட்டவிரோதமாக ரசீதும் வழங்கி வருகிறார். இப்படி வசூலிக்கப்படும் பணத்தை தன் சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்துகிறார். இதனைத் தட்டிக் கேட்க நினைத்த சங்க உறுப்பினர்களை அடியாட்களை வைத்து தாக்குகிறார்.

மேலும்  இதுபோன்று தொடர்ந்து நடைபெறாமல் இருக்கவும், அதனை தடுக்கும் வகையிலும் உறுப்பினர்களுக்கு இதனை தெரியப்படுத்தவும் ஜாக்குவார் தங்கத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்னையில் அரசு தலையிட்டு சுமுக தீர்வு ஏற்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சென்னையைச் சேர்ந்த ஜிகினா படத் தயாரிப்பாளர் சுரேஷ்குமார் கூறுகையில், சென்னை, தி.நகரில், ‘கில்டு’ எனும், தென்னிந்திய திரைப்பட மற்றும், ‘டிவி’ சீரியல்கள் தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளது. அதன் தலைவராக,சினிமா ஸ்டன்ட் மாஸ்டர், ஜாக்குவார் தங்கம் உள்ளார். நானும் அந்த சங்கத்தின் உறுப்பினராக உள்ளேன்.ஜாகுவார் தங்கம் சங்க நிதியில் இருந்து, முறைகேடாக 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளார். சங்கத்திற்காக 12 ஏக்கர் நிலம் வாங்கி இருப்பதாகவும் கூறினார்.வாங்காத இடத்தை வாங்கியதாக பொய் கூறுகிறார். அவருடைய மருமகன் மணிமாறன் மற்றும் அடியாட்கள் எங்களை மிரட்டி வருகின்றனர்.

வரவு – செலவு கணக்கு கேட்டதால், நான் உட்பட சங்க உறுப்பினர்கள் பலரிடம் இந்த ஆண்டுக் கான சந்தா தொகை வாங்க கூடாது என, உத்தரவிட்டுள்ளார். சங்க அலுவலகத்திலும் சில சட்ட விரோத செயல்கள் நடக்கின்றன. ஜாக்குவார் தங்கத்திடம் விசாரணை நடத்தி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து அனைத்து கில்டு உறுப்பினர்களிடமும் கலந்தாலோசித்து அடுத்தக்கட்ட போராட்டம் அறிவிக்கப்படும். தேவை ஏற்பட்டால் கில்டுக்கு பூட்டு போட்டு போராடுவோம் என கூறினார்.

கில்டு பொருளாளர் நந்த கோபால் கூறுகையில், கில்டு பணத்தை முறைக்கேடான வகையில் ஜாக்குவார் தங்கம் பயன்படுத்தி வருகிறார்.அது குறித்து நான் ஆட்சேபனை தெரிவித்ததால் என்னை பொருளாலர் பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதை நாங்கள் சட்டபடி சந்திப்போம் இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *