எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தின் 14 ஆவது பட்டமளிப்பு விழா 

எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தின் 14 ஆவது பட்டமளிப்பு விழா  தி.பொ.கணேசன் கலையரங்கத்தில் நடைபெற்றது. இப்பட்டமளிப்பு விழாவில் பத்மபூஷன் டாக்டர் வி.கே. சரஸ்வத் (Honorable member of NITI Aayog) அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
பட்டமளிப்பு விழாச் சிறப்புரையில் பத்மபூஷன் டாக்டர் வி.கே. சரஸ்வத் அவர்கள் “உலக அளவில் பொருளாதாரத் தளத்தில் தன்னைத் தனித்து உருவாக்கிக் கொள்ள வேண்டும் என விரும்பும் பொறியியல் மாணவர்கள் புதுமையாகச் சிந்திப்பதோடு சுற்றுப்புறத்தினை மனதில் கொண்டும் செயல்பட வேண்டும். மேலும் பொறியியல் மாணவர்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு கணினியின் திரையில் இருப்பதைப் பயன்படுத்தி உருவாக்கிவரும் செயல்பாட்டினைக் கைவிட்டு முற்றிலும் புதுமையான இதுவரை இல்லாதவற்றை உருவாக்க வேண்டும். புதிய வடிவமைப்புகளை உருவாக்குவதோடு அதன் செயல்பாட்டு வடிவம் அதன் தன்மை என அனைத்தையும் ஆராய்ந்து செய்யும் ஒரு முழுமை உடைய படிப்பினைப் பெற்று தேர்ச்சி பெற வேண்டும். நல்ல உலகத் தரம் வாய்ந்த ஒரு பொறியியல் மாணவனாக உருவாக்கம் பெற வேண்டும்” என்று அவர் தனது சிறப்புரையில் கூறினார்.
இவ்விழாவில் பொறியியல் மற்றும் தகவல்தொழில் நுட்பப் புலத்தில் பட்டவகுப்பு, முதுநிலைப்பட்டவகுப்பு, முனைவர்பட்டம் பயின்ற எட்டாயிரம் மாணவர்களில் ஏறத்தாழ 4000 மாணவர்கள் நேரடியாகப் பட்டம்பெற்றனர். இது தவிர ஒவ்வொரு துறை சார்ந்தும் சிறப்புத்தகுதி உடைய 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கப் பதக்கங்களைப் பெற்றனர். 53 ஆய்வு மாணவர்கள் முனைவர் பட்டமும் பெற்றனர்.
இப்பட்டமளிப்பு விழாவில் சென்னையில் இயங்கக்கூடிய இராஜன் கண் மருத்துவமனையின் தலைவர் மற்றும் மருத்துவ இயக்குநர் டாக்டர் மோகன் ராஜன் அவர்களுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. டாக்டர் மோகன் ராஜன் அவர்கள் தமது ஏற்புரையில் “பார்வைக்கும் தொலை நோக்குப் பார்வைக்கும் இடையே இருக்கக்கூடிய வேறுபாடு குறித்துப் பேசினார். கடந்த முப்பது வருடங்களாக முதன்மை இடத்தினைப் பெற்று இருக்கும் எஸ்.ஆர்.எம். கல்விக்குழுமம் அதன் தொலைநோக்குப் பார்வையாலேயே இன்று இந்நிலையில் உள்ளது. அதற்கு காரணம் இக் கல்விக்குழுமத்தின் வேந்தர் மற்றும் அவர் வழி வந்தவர்களுமே ஆவர். அவர்கள் அனைவருமே தொலைநோக்குச் சிந்தனை கொண்டவர்களாக இருப்பதாலேயே இக்கல்வி நிறுவனமும் தலைசிறந்து விளங்குகிறது என்று கூறினார். மேலும் பட்டம் பெறும் அனைத்துப் பட்டதாரிகளும் சமுதாயச் சிந்தனையுடன் செயல்படவேண்டும். நீங்கள் அனைவரும் உங்கள் வீட்டுக்குச் சென்று மகிழ்ச்சியாக இருங்கள். ஆனால் சமுதாயத்தை மறந்துவிடாதீர்கள் என்று தமது ஏற்புரையில் பேசினார்.
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் தமது வரவேற்புரையில், எஸ்.ஆர்.எம். கல்விக்குழுமத்தின் பல்வேறு சாதனைப் பட்டியலில் சமீபத்தில் பெற்ற தேசிய தர மதிப்பீட்டுக் குழுவின் (NAAC) A++ தர மதிப்பீடு பெற்றது குறித்தும் முதல்நிலை மதிப்பீட்டுத் தரம் உயர்ந்தது குறித்தும் குறிப்பிட்டுப் பேசினார். பல்துறை கொண்ட மிகப் பெரிய கல்வி நிறுவனமான எஸ்.ஆர்.எம்.மில் 50,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கிறார்கள். சமூகப்பொறுப்புணர்வுடனும் அக்கறையுடனும் செயல்படுவதே இக்கல்விநிறுவனத்தின் நோக்கம். சமீபத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தின் மாணவர்களின் கல்விக்கட்டணம் 48 கோடி ரூபாயினை கட்டுவதிலிருந்து விலக்கு அளித்திருக்கிறோம் எனத் தமது வரவேற்புரையில் குறிப்பிட்டுப் பேசினார்.
எஸ்.ஆர்.எம். கல்விநிறுவனத்தின் துணைவேந்தர் முனைவர் சந்தீப் சன்ஷெட்டி அவர்கள் ஆண்டறிக்கையினை வாசித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *